Saturday, 26 October 2013

                                              பூமி பரதேசிகளின் வீடு

பரதேசியாய் வாழ்வது அவ்வளவு எளிதல்ல. அது நதியில் நீராடுவதைப்போல இலகுவதானதாய் போலிருந்தாலும் ஆபத்தானதும் கூட.அதற்கு செல்வதற்கு புற உலகிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதே முதல் வழி. நட்சத்திரகூட்டத்திற்குள் இருக்கும் நிலவைப்போல ஒரே மனிதர்கள் மத்தியில் தனித்துவமாய் தெரிகிறார்கள் அவர்கள்.

பரதேசிகள் வேற்றுகிரகவாசிகள் அல்ல. இந்த உலக வாழ்க்கையிலிருந்து தன்னை துண்டித்துக்கொண்டவர்கள் தான். புத்தர் போல மகாவீரர் போல அடையாளம் காணமல் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.அவர்கள் பேசி நாம் கேட்பதில்லை,கேட்கவும் விருப்பமில்லை.அவர்களுக்கு இயங்கிகொண்டிருக்கும் இயந்திர உலகத்தின் நுட்பங்கள் பற்றி தெரியாது. Facebook, Block,Twitter,Media, பற்றியோ அரசியல் மாற்றங்கள் பற்றியோ எதுவுமே தெரியாது, தெரிந்துருப்பவர்கள் காவி சந்நியாசிகளாய் இருப்பார்கள்.

பரதேசிகள் இயற்கையின் குழந்தைகள். முதுமையிலிருந்து குழந்தமை திரும்பும் அவர்கள் மனநிலை அலாதியானது.மழையிலும் வெயிலிலும் குளிரிலும் பூமியின் மடியிலே கிடக்கிறார்கள். ஒருபோதும் அவர்கள் மருத்துவமனையின் வாசலில் கால் கடுக்க நின்றதில்லை, ஏனெனில் உணவக விடுதியில் ஆர்டர் கொடுத்துவிட்டு வெகுநேரம் அமர்ந்திருப்பதில்லை.

பரதேசிகள் பூமியை இடம், வலம் ,அகலம், நீளம் என தெரியாமல் நடந்துகொண்டேயிருக்கிறார்கள். பறவைகள் வான அலைதலை போல இவர்கள் பூமி அலைதலை மேற்கொள்கிறார்கள்.

தொலைதூரம் செல்லும் பயணவாசியைப்போல முடிதலை நோக்கியே மனம் சதா எல்லோருக்கும் பயணித்துக்கொண்டிருக்கிறது. வெளி ரசிக்கும் குழந்தைகளை கூட நாம் அனுமதிப்பதில்லை. இயற்கை யாருக்காக இருக்கிறது ? இருக்கும் இடத்தில் இயற்கையை ரசிப்பவன் எல்லை தாண்டுவது எப்போது ? இயற்கையும் இளமையும் இழந்தபிறகு ரசிப்பதில் என்ன பயன் ?

பரதேசிகள் காற்றில் நடக்கிறார்கள். மழையை உடலில் அருந்துகிறார்கள், மரம் செடி கொடிகளிடம் அதன் காதுகளில் பேசுகிறார்கள்.



                                                                               =====   சுரேஷ்மான்யா======

Sunday, 13 October 2013

நிழலின் மீது பனி பெய்துகொண்டிருந்தது

ஒரு மாதத்திற்கு முன்பு நானும் நண்பர் சிவாவும் சிறுமலை சென்றிருந்தோம்.திண்டுக்கல்லிலிருந்து நத்தம் போகும் வழியில் இருக்கிறது அவ்வூர். பெய்ருக்கேற்ற சிறிய மலைகள் உள்ள ஊரில் காப்பித்தோட்டங்கள் நிறைந்திருந்தன. பெருந்து பயணம் மலைக்கு எப்போதும் ஏற்றதாய் இருக்கும். மலைப்பெண்கள் எங்கேயும் அழகுடனே காணப்படுகிறார்கள். இளம் மழையில் நனைந்திருக்கும் கேரட் செடியைப் போல.குளிருக்கு ஏற்ற ஸ்வட்டர்களில் ஆண்களும் பெண்களூம் தங்களை இறுக்கியபடியே நடந்து செல்கிறார்கள். ஏன் அந்தப் பெண்கள் வித்தியாச அழகில் இருக்கிறார்கள் என்ற தீவிர சிந்தனையில் மனம் சுழன்றுகொண்டிருக்க பேருந்து மூச்சித்திணறி ஊருக்குள் உருண்டுக்கொண்டிருந்தது. ஒருவேளை மழையை முதலில் வாங்குபவர்கள் இயற்கை அழகோடே மிளிர்கிறார்கள் என நினைக்கத் தோன்றியது. மழைவாங்கிகள். பூமித்தாயின் மூத்த குடிமக்கள். இயற்கையின் இளமைத் தோன்றல்கள்.மலைவளம் அழகைப் பற்றி திரிகூடராசப்பக் கவிராயர் குற்றால குறவஞ்சியில் என்னமாய் எழுதியிருக்கிறார்,அனுபவித்து எழுதியிருக்கிறார் மனுசன். யாருக்குத்தான் குறவஞ்சி பிடிக்காமல் போய்விடும். காலைக் கதிரவன் மெலிதாக தன் கதிர்களை வெளியே வீசிக்கொண்டிருக்க காப்பி செடிகளின் கீழே மேற்கு நோக்கி நிழல் விழத் தொடங்கியது. இரவுப் பனி செடியிலிருந்து மறைவதற்கு பிரியப்படாமல் அதிகாலை தூக்கவாசிகளைப் போல முரண்டு பிடித்துக் கொண்டிருந்தன.கதிரவன் தன் கண்களை அகலமாக விரிக்க விரிக்க பனித்திவலைகள் செடியின் காலடியில் விழத் தொடங்கியது,செடியின் நிழலில் பனி பொழிந்துகொண்டிருந்தது.நாங்கள் பேருந்தை விட்டு இறங்கி கால்களாலே மலை முழுக்க சுற்றி வந்தோம்.சாலையோரக் கடையில் ஒரு தேநீர் அருந்தாமல் வருவது கடலுக்கு சென்று கால் நனைக்காமல் வருவதைப்போல மனம் சஞ்சலமடைந்து கொண்டேயிருக்கும்.நான் ஒரு மிடறு விழுங்கினேன் மலை முழுவதையும் உறிஞ்சி குடித்தது போல இதமாய் இறங்கியது. இரவின் வெளிச்சம் மலைசூழ நாங்கள் இறங்க ஆரம்பித்தோம்.( ஆண்களைப் பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை எனத் தோன்ற இதோ ஒரு வரி ஆண்கள் அங்கே அழகானவர்கள் நிறைய இல்லை, ஆனால் எல்லாரும் நல்லவர்கள் )

Saturday, 12 October 2013

சமய திருவிழாக்கள்

எனக்கு சாமியின் மீது நம்பிக்கை இல்லை.சமய சடங்குகளில் சிலவற்றில் நம்பிக்கை இருக்கிறது.திருவிழாக்களை ஆதரிக்கவே செய்கிறேன்,ஏனெனில் கடவுளின் பெயரால் மனிதர்கள் உறவு கொள்கிறார்கள். ஆயுதபூஜை க்கு நம்பிக்கை இருப்பவர்கள் கடவுளை தரிசிக்கிறார்கள், தங்கள் பயன்படுத்துகின்ற ஆயுதங்களுக்கு பொட்டிட்டு வணங்குகிறார்கள். கடவுளின் பெயரால் கொண்டாடப்படும் திருவிழாக்களில் வழங்கப்படும் சன்மானமும் பலகாரங்களும் முக்கியமானவை. தொழிலாளர்கள் தினம் என்பது மே 1 ஆக இருந்தாலும் முழுமனதுடன் இத்தினத்தையே கொண்டாடுகிறார்கள். நகர வீதிகளில் தோரணம் விற்றுக்கொண்டிருக்கும் சிறுவர்களிடம் சிறிது தொகைக்காகவும் வாங்குங்கள். அவன் கனவு வரவிருக்கும் வெளிச்சமான தீபாவளி கொண்டாட்டமாய் இருக்கலாம்.

Friday, 11 October 2013

நட்பு

நட்பு என்பது பரிசோதிக்கப்படுவதற்கு ஆராய்ச்சிகூடமல்ல அது ஒரு நீச்சல் குளம் , நீந்த நீந்த இலகுவானது. சதா இன்பத்தை பங்கு கொள்பவர்களால் அதை புரிந்து கொள்ளமுடியாது .
சமூகம் நமக்கான வார்த்தைகளை தினம் தினம் தயாரித்து வைத்துக் காத்துக்கொண்டிருக்கிறது. வீட்டிற்குள்ளும் வீட்டிற்கு வெளியிலும் வார்த்தைகள் இறைந்து கொண்டிருக்கின்றன. செவிடர்களாய் , குருடர்களாய் இருந்து விடுவது எவ்வளவு நலம் என்று வார்த்தைகளில் காயம் பட்டவர்களுக்கு தெரியும்.

பறத்தலின் நிமித்தம்

நீ தலை வைத்து படுக்கையில் சுகமாய் தூங்குகிறது உன் வீட்டு தலையணை