Sunday 13 October 2013

நிழலின் மீது பனி பெய்துகொண்டிருந்தது

ஒரு மாதத்திற்கு முன்பு நானும் நண்பர் சிவாவும் சிறுமலை சென்றிருந்தோம்.திண்டுக்கல்லிலிருந்து நத்தம் போகும் வழியில் இருக்கிறது அவ்வூர். பெய்ருக்கேற்ற சிறிய மலைகள் உள்ள ஊரில் காப்பித்தோட்டங்கள் நிறைந்திருந்தன. பெருந்து பயணம் மலைக்கு எப்போதும் ஏற்றதாய் இருக்கும். மலைப்பெண்கள் எங்கேயும் அழகுடனே காணப்படுகிறார்கள். இளம் மழையில் நனைந்திருக்கும் கேரட் செடியைப் போல.குளிருக்கு ஏற்ற ஸ்வட்டர்களில் ஆண்களும் பெண்களூம் தங்களை இறுக்கியபடியே நடந்து செல்கிறார்கள். ஏன் அந்தப் பெண்கள் வித்தியாச அழகில் இருக்கிறார்கள் என்ற தீவிர சிந்தனையில் மனம் சுழன்றுகொண்டிருக்க பேருந்து மூச்சித்திணறி ஊருக்குள் உருண்டுக்கொண்டிருந்தது. ஒருவேளை மழையை முதலில் வாங்குபவர்கள் இயற்கை அழகோடே மிளிர்கிறார்கள் என நினைக்கத் தோன்றியது. மழைவாங்கிகள். பூமித்தாயின் மூத்த குடிமக்கள். இயற்கையின் இளமைத் தோன்றல்கள்.மலைவளம் அழகைப் பற்றி திரிகூடராசப்பக் கவிராயர் குற்றால குறவஞ்சியில் என்னமாய் எழுதியிருக்கிறார்,அனுபவித்து எழுதியிருக்கிறார் மனுசன். யாருக்குத்தான் குறவஞ்சி பிடிக்காமல் போய்விடும். காலைக் கதிரவன் மெலிதாக தன் கதிர்களை வெளியே வீசிக்கொண்டிருக்க காப்பி செடிகளின் கீழே மேற்கு நோக்கி நிழல் விழத் தொடங்கியது. இரவுப் பனி செடியிலிருந்து மறைவதற்கு பிரியப்படாமல் அதிகாலை தூக்கவாசிகளைப் போல முரண்டு பிடித்துக் கொண்டிருந்தன.கதிரவன் தன் கண்களை அகலமாக விரிக்க விரிக்க பனித்திவலைகள் செடியின் காலடியில் விழத் தொடங்கியது,செடியின் நிழலில் பனி பொழிந்துகொண்டிருந்தது.நாங்கள் பேருந்தை விட்டு இறங்கி கால்களாலே மலை முழுக்க சுற்றி வந்தோம்.சாலையோரக் கடையில் ஒரு தேநீர் அருந்தாமல் வருவது கடலுக்கு சென்று கால் நனைக்காமல் வருவதைப்போல மனம் சஞ்சலமடைந்து கொண்டேயிருக்கும்.நான் ஒரு மிடறு விழுங்கினேன் மலை முழுவதையும் உறிஞ்சி குடித்தது போல இதமாய் இறங்கியது. இரவின் வெளிச்சம் மலைசூழ நாங்கள் இறங்க ஆரம்பித்தோம்.( ஆண்களைப் பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை எனத் தோன்ற இதோ ஒரு வரி ஆண்கள் அங்கே அழகானவர்கள் நிறைய இல்லை, ஆனால் எல்லாரும் நல்லவர்கள் )

2 comments:

  1. வணக்கம் நண்பா.
    வசீகரமான நடை உங்களுக்கு வருகிறது. உங்கள் கால்களில் பனித்துளி அலம்ப நான் நடந்து மலையைச் சுற்றி வந்து, தேநீர் அருந்தியது போல உணர்கிறேன். அருமை. தொடர்வோர் மற்றும் தமிழ்மணம் பட்டை இணைத்து வலைப்பக்கத்தை மேம்படுத்துங்க தொடர்ந்து எழுத வேண்டுகிறேன். நானும் தொடர்வேன் நன்றி.

    ReplyDelete
  2. நன்றி சார்

    ReplyDelete